“அன்புக்குரியவர் ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கு உரிய பதில் வழங்கப்படாமல் இருப்பதனால் ஏற்படும் காயத்தின் வலியை காலத்தினால் மாத்திரம் குணப்படுத்தி விடமுடியாது. உண்மையும், நீதியும் உறுதிப்படுத்தப்படாதவிடத்து அந்த வலி மேலும் தீவிரமடையும்” என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே சுட்டிக்காட்டியுள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு மார்க் அன்ட்ரூ பிரான்சேவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது. “இலங்கை முழுவதிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது என்பது இன்னமும் தெரியவில்லை. இதனால் ஏற்பட்ட காயம் அமைதியினாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினாலும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதனாலும் இன்னமும் ஆறாமல் இருக்கின்றது.
அன்புக்குரியவர் ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்குரிய பதில் வழங்கப்படாமல் இருப்பதனால் ஏற்படும் காயத்தின் வலியை காலத்தினால் மாத்திரம் குணப்படுத்திவிடமுடியாது. உண்மையும், நீதியும் உறுதிப்படுத்தப்படாதவிடத்து அந்த வலி மேலும் தீவிரமடையும்.
அந்தவகையில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் என்பது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நினைவுகூருவதற்கும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழான இம்மீறல் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படவோ அல்லது மன்னிக்கப்படவோ மாட்டாது என்பதை ஞாபகமூட்டுவதற்குமான நாளாகும்.
இவ்வருடம் மனிதப் புதைகுழி அகழ்வுகளை அடுத்து தீர்க்கப்படாத இவ்விவகாரத்தின்மீது அதிக கவனம் குவிக்கப்பட்டதை பார்த்தோம். அம்மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளும், சிறுவர்கள் பயன்படுத்துபவை உள்ளிட்ட தனி மனித உடைமைகளும் கடந்தகால மனித உரிமை மீறல்களின் பாரதூரத்தன்மையை நினைவுறுத்தும் அதேவேளை, இதுகுறித்து நம்பகத்தன்மை வாய்ந்ததும், வெளிப்படையானதுமான சுயாதீன விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
இதுபற்றிய உண்மைகளைக் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் காயங்களை ஆற்றவும், நீதியை நிலைநாட்டவும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் முடியும். அதன்மூலம் நாடு என்ற ரீதியில் கடந்தகால வடுக்களில் இருந்து மீண்டெழவும், தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிப் பயணிக்கவும் முடியும்.
உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பன நல்லிணக்கத்துக்கும், அரச கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கைக்கும், இலங்கை மக்கள் கோரும் நிலையான சமாதானத்துக்குமான அடிப்படையாகும். அதன்படி வலிந்து காணாமலாக்கப்படல்களில் இருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தில் கையெழுத்திட்டமை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தமை என்பன உள்ளடங்கலாக வலி மிகுந்த இந்நிலவரத்தை சீரமைப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தக் கட்டமைப்புக்களுக்கு அவசியமான வளங்கள், தடயவியல் மற்றும் விசாரணை இயலுமை என்பன வழங்கி ஆதரவளிப்பதுடன் நீதியை நிலைநாட்டுவதற்கு ஏதுவாக அவற்றின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்படவேண்டும். குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகமானது தடயவியல் ஆய்வு மற்றும் விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் தமது சகல சட்ட அதிகாரங்களையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்திருக்கு உரிய பதில்களை வழங்குவதற்காக பயன்படுத்தவேண்டும். அண்மையில் மனிதப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தமை வரவேற்கத்தக்க நகர்வு எனினும், இன்னமும் பலவற்றைச் செய்யவேண்டியிருக்கிறது.
அதேபோன்று நினைவுகூரல் செயற்பாடுகள் உள்ளடங்கலாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கண்காணிப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்து வருவது குறித்து நாம் மிகுந்த கரிசனையடைகிறோம். தமது உரிமைகள் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் சகலரும் பாதுகாக்கப்படவேண்டுமேயன்றி, தண்டிக்கப்படக்கூடாது.
கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் உண்மைகளைக் கண்டறிவது அடிப்படை உரிமையாகும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதுமாத்திரமன்றி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் வலியுறுத்தியமையானது கடந்தகால உண்மைகள் வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. இச்செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருக்கிறது” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.










