இலங்கையில் சமீப காலமாக பல மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவை, கடந்த சில தசாப்தங்களில் நடந்த இனவாதக் கொலைகளின் சாட்சியங்களாக கருதப்படுகின்றன. 1983 ஜூலை மாதத்தில் வெலிக்கடை சிறையில் நடந்த பயங்கரமான தமிழ்க் கைதிகள் படுகொலை மீண்டும் கவனம் திரும்பச் செய்துள்ளன.
1983 ஜூலை 25 மற்றும் 27 ஆகிய நாட்களில், வெலிக்கடை சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளால், சிறை அதிகாரிகளின் உதவியுடன், இரும்புக் கம்பிகள், குச்சிகள் மற்றும் பிற ஆயுதங்களால் அடித்து கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள், அப்போது நாட்டில் நடந்த இனவாத தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலைகளுக்குப் பிறகு, கொல்லப்பட்டவர்களின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன?, எவ்வாறு தகனம் செய்யப்பட்டன? என்பது குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
சுயாதீன விசாரணை அறிக்கைகள் மற்றும் சாட்சியக் கணக்குகளின்படி, உடல்கள் சிறை வாகனத்தில் ஏற்றி, பொரளை பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இரகசியமாகத் தோண்டப்பட்ட குழியில் விறகுகளுடன் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
1983 வெலிக்கடை படுகொலையில் கொல்லப்பட்ட செல்வராஜா யோகச்சந்திரனின் மகன் மதிவண்ணன், “என் தந்தை உட்பட, கொல்லப்பட்ட அனைவரும் எங்கே புதைக்கப்பட்டனர்? அவர்களின் உடல்களுக்கு என்ன நடந்தது?” என்ற கேள்விகளை எழுப்புகிறார். “நாங்கள் ஒரு முறையான சர்வதேச விசாரணையையும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மட்டுமே கேட்கிறோம்” என அவர் கூறுகிறார்.
மதிவண்ணன், இந்தியாவில் அகதிகள் முகாமில் இருந்தபோது, தனது தந்தையின் கொலை பற்றி வானொலி மூலம் தெரிந்து கொண்டதாகவும், அப்போது அவருக்கு வெறும் 12 வயதுதான் இருந்ததாகவும் கூறுகிறார்.
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், “தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு சுயாதீன விசாரணையை நடத்தி, நாற்பது ஆண்டுகளாக பல அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படுத்தும் திறன் உள்ளது” என வலியுறுத்துகிறார்.
மதிவண்ணனும் சிவாஜிலிங்கமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். அவர்கள், எந்தவொரு ஒளிவு மறைப்பும் இன்றி, சர்வதேச தடயவியல் நிபுணர்களின் மேற்பார்வையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
1981ஆம் ஆண்டு நீர்வேலி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட TELO உறுப்பினர்கள் செல்வராஜா யோகச்சந்திரன் (குட்டிமணி), நடராஜா தங்கவேலு (தங்கதுரை), கணேசநாதன் ஜெகநாதன் (ஜெகன்) உள்ளிட்ட ஆறு தமிழ்க் கைதிகள், மரண தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர். இவர்களும் படுகொலையில் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
சேபால ஏக்கநாயககே என்ற சிங்களக் கைதி, தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்த சிங்களக் கைதிகளை தூண்டியதாகவும், வழிநடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
















