2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சரணடைந்த சகலரது பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட வேண்டும் எனவும், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான முறையான செயற்திட்டம் அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் வரை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெற்கைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வலியுறுத்தியுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு சமூக செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோவின் தலைமையில் தெற்கைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (29) கையளித்தனர்.
அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, “வலிந்து காணாமலாக்கப்பட்டவர் திருமணமானவர் எனின் அவரது குடும்பத்துக்கு 50,000 ரூபாவும், இளைஞர் எனின் 25,000 ரூபாவும், மாணவர் எனின் 15,000 ரூபாவும் மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு இந்த நிவாரணக்கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை.
அதேபோன்று 2019 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வரவு, செலவுத் திட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் 2019 நவம்பர் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அக்கொடுப்பனவு 153 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்ததுடன் அதற்காக வெறுமனே 7 மில்லியன் ரூபா நிதி மாத்திரமே செலவிடப்பட்டிருந்தது.
அதேவேளை 2022 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா 100,000 ரூபாவை இறுதிக் கொடுப்பனவாக செலுத்துமாறு அமைச்சரவையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் உள்ளடங்கலாக பல அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அதனை இறுதிக் கொடுப்பனவாக ஏற்பதற்கு மறுத்ததன் காரணமாக, அது தற்காலிக நிவாரணக் கொடுப்பனவு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்தோடு இந்தத் தொகை போதுமானது அல்ல என்பதனால், அதனை 200,000 ரூபாவாக அதிகரிப்பதாக 2022 ஒக்டோபர் 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதற்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், 800 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்நிதியின் ஊடாக 5000 குடும்பங்கள் பயனடைந்திருக்க முடியும் என்றாலும் கூட, சுமார் 4000 குடும்பங்கள் மாத்திரமே அக்கொடுப்பனவைப் பெற்றிருக்கின்றன.
இவ்வாண்டு வரவு, செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின்கீழ் எந்தவொரு குடும்பமும் கொடுப்பனவைப் பெறவில்லை. இந்நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா அடுத்துவரும் 4 மாதங்களில் உரியவாறு பயன்படுத்தப்படாவிடின், அந்நிதி மீண்டும் திறைசேரியை சென்றடையும். இந்நிதியின் ஊடாக 5000 குடும்பங்கள் பயனடைந்திருக்கக்கூடும் எனினும், அவ்வுரிமையை தற்போதைய அரசாங்கம் இவ்வாண்டு முழுவதும் மறுத்திருக்கிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் நிலையாகக் கட்டமைக்கப்பட்ட இழப்பீடு வழங்கலுக்கு உரித்துடையவர்கள் என அரசாங்கம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவேண்டும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் தற்போது நடைமுறையில் உள்ள 200,000 ரூபா தற்காலிக கொடுப்பனவு சகல குடும்பங்களுக்கும் வழங்கப்படவேண்டும். 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சரணடைந்த சகலரது பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படவேண்டும்.
நாட்டில் கண்டறியப்பட்ட சகல மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதி வளங்களை ஒதுக்கீடு செய்து பெற்றுக்கொள்வதுடன், இவ்விவகாரத்தில் சர்வதேசத்திடம் அவசியமான உதவிகளை நாடவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான முறையான செயற்திட்டம் அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் வரை, ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படவேண்டும். மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்” என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.










