இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கும் அதேவேளை, நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு, தண்டனையிலிருந்து விலக்கு மற்றும் நீதிக்கான தடைகள் ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்குமாறு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.லீலாதேவி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு லீலாதேவி அனுப்பி வைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, “இலங்கை அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களாகிய நாங்கள், இந்நாளில் உங்களது உடனடிக் கவனத்தையும், தீர்க்கமான நடவடிக்கையையும் கோரி மீண்டும் ஒருமுறை உங்களுக்கு கோரிக்கை முன்வைக்கிறோம்.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் என்ற ரீதியில், தொடர்ந்து 3000 நாட்களுக்கும் மேலாக நாங்கள் இடைவிடாமல் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் இன்னமும் மாற்றமின்றித் தொடர்கின்றன. காணாமலாக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவவேண்டும் எனவும், எதிர்வருங்காலத்தில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு சர்வதேச மேற்பார்வை அவசியம் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
உலகைப் பொறுத்தமட்டில், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் என்பது ஒரு நினைவு நாளாகும். ஆனால் எம்மைப் பொறுத்தவரை, நீதியின்றி நினைவுகூருதல் என்பது எமது வலியை மேலும் ஆழப்படுத்துகிறது. இந்தத் தினம் வெறும் அடையாளமாக மாத்திரம் இருக்குமா? அல்லது இது உண்மையான பொறுப்புக்கூறலுக்கு வலுச்சேர்க்குமா என்பதை சர்வதேச சமூகம் தான் தீர்மானிக்கவேண்டும்.
இலங்கையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பது தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பின் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு படுகொலைகள் முதல் 2009 ஆம் ஆண்டு போரின் கொடூரமான இறுதிக் கட்டங்கள் வரையான சம்பவங்கள் மற்றும் இன்று வரை தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்பவற்றுக்குக் காரணமான குற்றவாளிகளும், அதனை இயக்கிய இலங்கை அரசாங்கப் பொறிமுறைகளும் படுகொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பவற்றுக்கு இன்னமும் பொறுப்புக்கூறாமல் தப்பித்து வருகின்றன.
2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எமது தொடர் கவனயீர்ப்புப் போரட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் பலர் பதில்களின்றி இறந்துவிட்டனர். நாங்கள் தொடர்ந்து போராடுபவர்கள் மாத்திரமல்ல. மாறாக நாங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளும் என்பதால் இடைவிடாமல் மனவுறுதியுடன் போராடி வருகிறோம். நாம் கோருவது வெறும் உத்தரவாதங்களை அல்ல. மாறாக உரிய நடவடிக்கைகளையே நாம் கோருகிறோம்.
அண்மையில் நடைபெற்ற யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு சொந்தமானவை உள்ளடங்கலாக இதுவரை 167 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி சிறுவர்களின் பாடசாலை புத்தகப்பை, ஆடைகள், பால் போத்தல், பொம்மைகள் போன்ற பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு வட, கிழக்கு எங்கிலும் பல மனிதப் புதைகுழிகள் இருக்கும் என அஞ்சுகிறோம்.
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும் அதனை அகழ்வதன் ஊடாக மாத்திரம் நீதியைப் பெறமுடியாது. குற்றவாளிகள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பலவீனமானது, அரசியல் மயமாக்கப்பட்டது மற்றும் செயற்திறனற்றது என்பது நிரூபனமாகியுள்ளது. அதனூடாக உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. ஒரு அரசினால் தமது குற்றங்களை நம்பகத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். உள்நாட்டுப் பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டன என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். பாரபட்சமற்றதொரு சர்வதேச பொறிமுறையால் மாத்திரமே நீதியை வழங்கமுடியாது.
எனவே எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு வலியுறுத்துகிறோம். அத்தோடு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு, தண்டனையிலிருந்து விலக்கு மற்றும் நீதிக்கான தடைகள் ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.










