மனித உரிமைசார் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கரிசனைகளை முன்வைப்பது பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் சமூகத்தின் உரிமை என்பதை அமைச்சர் பிமல் ரத்நாயக்க புரிந்து கொள்ளவேண்டும். அதனை ‘நாடகம்’ எனக் கூறுவது இன்றளவிலே பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு கட்டமைப்பை தாழ்த்தும் வகையில் அமைந்திருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “யுத்தத்தினால் மரணித்தோர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் சில சந்தர்ப்பங்களில் அநாவசிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
நான் பல தடவைகள் மனிதப் புதைகுழிகளைச் சென்று பார்வையிட்டிருக்கிறேன். உதாரணமாக கடந்த மே மாதம் நான் செம்மணி மனிதப் புதைகுழியைச் சென்று பார்வையிட்டபோது, அங்கு ஒரு காவலர் கூட இருக்கவில்லை. ஆனால் செப்டெம்பர் மாதம் நெருங்கும்போது இவ்விடயங்கள் பூதாகரமாக்கப்படுவதைப் பார்க்கின்றோம். குறுகிய அரசியல் நோக்கிலான இவ்வாறான செயற்பாடுகளை மக்களே புறக்கணிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது அக்கருத்தை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில் அம்பிகா சற்குணநாதன் மேலும் கூறியிருப்பதாவது, “வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (29) அலரி மாளிகையில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரைக் குறிக்கும் வகையில் ‘செப்டெம்பர் நெருங்குகையில் நாடகங்கள் ஆரம்பமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பயன்படுத்தி அரங்கேறும் அவ்வாறான நாடகங்களை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அவர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடச் சென்றபோது, அதன் வாயிலில் ஒரு காவலாளி கூட இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனிதப் புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை என்பதையும், அவர் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதையும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அதேபோன்று மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கரிசனைகளை முன்வைப்பது பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் சமூகத்தின் உரிமை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ளவேண்டும். அதனை ‘நாடகம்’ எனக் கூறுவது இன்றளவிலே பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு கட்டமைப்பை தாழ்த்துவதாகவே அமைந்திருக்கிறது.
அதுமாத்திரமன்றி செம்மணி விவகாரம் குறித்து தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவ்வாறிருக்கையில் பேரவைக் கூட்டத்தொடர் நெருங்குகையில் மாத்திரம் பாதிக்கப்பட்ட தரப்பினர் இவ்விவகாரம் பற்றிப் பேசுவதாகவும், அத்தரப்பினர் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணம் எனவும் கூறுவதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினர் வெறும் தலையாட்டி பொம்மைகள் போல சித்தரிக்கப்படுகிறார்கள்.
அடுத்ததாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஓர் சுயாதீன கட்டமைப்பாகவே இயங்கவேண்டும். ஆனால் அதன் சுயாதீனத்தன்மை குறித்து ஏற்கனவே சந்தேகங்கள் நிலவும்போது, அலரி மாளிகையில் நிகழ்வொன்றை நடாத்துவதானது அச்சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தும். சுயாதீனத்துவம் எனும்போது அரசாங்கத்திடமிருந்து எவ்வித அறிவுறுத்தல்களோ, ஒப்புதல்களோ அல்லது அழுத்தங்களோ இன்றி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் தீர்மானங்களை சுயமாக மேற்கொள்ளவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.










