மட்டக்களப்பு, மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20,000 ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை திருடிய பெண்ணை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வெல்லாவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது பெண் ஆவார்.
வரலாற்றுப் புகழ்பெற்ற மண்டூர் முருகன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் வேளையில், ஆலய தரிசனத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரின் கைப்பை திருடப்பட்டது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில், ஆலயப் பகுதியில் திருடிய பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து திருடப்பட்ட பணப்பையும், அதிலிருந்த 20,000 ரூபாவும் மீட்கப்பட்டன.
மேலும், அவரிடமிருந்து கூடுதலாக 65,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.
குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










