“இன்றளவிலே ஆட்சி நிர்வாகம் எனும் வாகனத்தில் மூன்று சக்கரங்கள் உரியவாறு செயற்பட்டாலும், நான்காவது சக்கரமான மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதித்துவம் தடைப்பட்டுள்ளது. அதன் விளைவாக குறிப்பாக வட கிழக்கு மக்களால் ஆட்சி நிர்வாகத்தில் உரியவாறான பிரதிநிதித்துவத்தை வழங்க முடியாதிருப்பது பாரிய அநீதியாகும். எனவே எந்தவொரு அரசியல் நலனுக்கும் அப்பாற்பட்டு, மாகாண சபைகளை உடனடியாக இயங்கச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, “அமெரிக்காவின் புதிய வரிக்கொள்கையின் விளைவாக இலங்கை உள்ளடங்கலாக உலகின் பல நாடுகள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையில் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில் இலங்கை பெற்றுக்கொண்ட பொருளாதார நலனை சரியான முறையில் பயன்படுத்தி புத்திசாலித்தனமாகவும், நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் தேசிய ரீதியிலான ஏற்புடைமையுடன் செயற்படுவதன் ஊடாக எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும் என நம்புகின்றோம்.
நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியடைந்து வருவதுடன் அதனூடாக குறிப்பிடத்தக்க அளவு வெளிநாட்டுச் செலாவணி வருமானம் கிடைக்கின்றது. அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலமான உட்பாய்ச்சலின் ஊடாகவும் நாட்டின் திறைசேரி பெருமளவுக்குப் பலமடைகின்றது. ஏற்றுமதித்துறை குறிப்பிடத்தக்களவு விரிவடைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இருப்பினும் தற்போது நிலவும் மட்டத்தை விடவும் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கவேண்டும்.
அதேவேளை சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலகின் முதன்மை வர்த்தக துறைமுக கேந்திர நிலையமாகத் திகழ்வதற்கான வாய்ப்பு இலங்கைக்கு இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாம் அவ்வாய்ப்பை பயனளிக்கக்கூடிய வகையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அதேபோன்று சுகாதார மற்றும் கல்வி மத்திய நிலையமாகத் திகழ்வதற்கான சகல தகுதிகளும் இலங்கைக்கு இருக்கின்றன. இதுபற்றி அண்மையில் மாலைதீவு ஜனாதிபதி பிரஸ்தாபித்திருந்தார். இருப்பினும் உலகிலேயே தனியார் மருத்துவக் கல்வி வழங்கலை எதிர்க்கும் ஒரே நாடாக இலங்கை இருக்கின்றது. இப்போதேனும் இந்தப் பிற்போக்குத்தனமான கொள்கைகளை மாற்றியமைக்கவேண்டும்.
இது இவ்வாறிருக்க, உள்ளுராட்சி மன்றங்கள் இயங்க ஆரம்பித்ததன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாகாண சபைகள் இயங்காததன் விளைவாக பாரிய இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது.
அதன் காரணமாக சுமார் 11 ஆண்டுகளாக பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருப்பினும் மாகாணங்களுக்கான ஆளுநர்களால் மாத்திரம் இதனைச் செய்யமுடியாது.
இன்றளவிலே ஆட்சி நிர்வாகம் எனும் வாகனத்தில் மூன்று சக்கரங்கள் உரியவாறு செயற்பட்டாலும், நான்காவது சக்கரமான மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதித்துவம் தடைப்பட்டுள்ளது. அதன் விளைவாக குறிப்பாக வட கிழக்கு மக்களால் ஆட்சி நிர்வாகத்தில் உரியவாறான பிரதிநிதித்துவத்தை வழங்கமுடியாதிருப்பது பாரிய அநீதியாகும்.
எனவே எந்தவொரு அரசியல் நலனுக்கும் அப்பாற்பட்டு, மாகாண சபைகளை உடனடியாக இயங்கச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனைச் செய்யாமல் இருப்பதை மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் செயலாகவே நாம் கருதுகின்றோம்” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










