“வட கிழக்கில் அதிகளவான இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை அவ்விரு மாகாணங்களிலும் நடாத்தப்படவிருக்கும் ஹர்த்தாலுக்கு சகல தரப்பினரும் ஆதரவு வழங்கவேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருப்பதுடன் ஹர்த்தாலுக்கு ஆதரவுகோரி நேற்றைய தினம் வட கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
வட கிழக்கு மாகாணங்களில் தொடரும் அதிகளவிலான இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (15) அவ்விரு மாகாணங்களும் முழுமையாக முடங்கும் வகையில் ஹர்த்தால் அனுட்டிக்குமாறும், அதற்கு சகல தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.
இருப்பினும் அதே தினத்தில் மன்னார் மடுமாதா தேவாலய திருவிழா நிகழ்வு நடைபெறவிருப்பதன் காரணமாக மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வருடனான ஆலோசனையின் பின்னர், நல்லூர் முருகன் ஆலயத் திருவிழா நிகழ்வுகளையும் அனுசரித்து ஹர்த்தாலை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (18) பிற்போடுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (12) சுமந்திரன் அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து நேற்றைய தினம் (15) சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வட கிழக்கில் அதிகளவான இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக நாம் 2010 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக குரலெழுப்பி வந்திருக்கிறோம்.
மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் நீண்டகாலமாக இருப்பதனால் ஏற்படும் மிகமோசமான தொடர் விளைவுகளினதும், பிறழ்வுகளினதும் ஒரு உதாரணமே முத்தையன்கட்டு சம்பவமாகும். இந்த நிலைமை நீடிக்கக்கூடாது என வலியுறுத்தியும், இச்சம்பவத்தை கண்டித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை நிகழ்த்தப்படவுள்ள ஹர்த்தாலுக்கு சகலரது ஆதரவையும் கோருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஹர்த்தாலுக்கு ஆதரவுகோரி நேற்று (15) வெள்ளிக்கிழமை நெல்லியடி உள்ளடங்கலாக வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.










