“நாட்டில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் அரசின் முயற்சியால் கண்டறியப்பட்டவை அல்ல. மாறாக அவை பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஏதேனுமொரு சிவில் செயற்பாட்டின்போது தற்செயலாகக் கண்டறியப்பட்டவையாகும். எனவே எவ்வித சாட்சியமும் இன்றி மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இந்த உயிர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும். இம்மனிதப் புதைகுழிகள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உண்மையை புதைக்க முடியாது என்பதையே காண்பிக்கின்றன” என சட்டத்தரணி ரணிதா ஞானராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் எழுதிய ‘செம்மணி’ எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும், அதனைத் தொடர்ந்து ‘இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனிதப் புதைகுழிகள்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (14) பி.ப 2.30 மணிக்கு கொழும்பிலுள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபை அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைக் கண்காணித்து, அவ்விவகாரம் தொடர்பில் இயங்கி வரும் ரணிதா ஞானராஜா இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு, “உலகளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குவிதிகள் என்பன வலுகட்டாயமாக மக்கள்மீது பிரயோகிக்கப்பட்டன. அக்காலப்பகுதியில் விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டோரில் பலர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் வரை வலிந்து காணாமலாக்கப்படல்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான யுத்தகால நடைமுறைகள் தற்போதும் திரைமறைவில் அரங்கேற்றப்பட்டு வருவதைக் காண்கிறோம்.
தற்போது இலங்கையில் 14 அகழப்பட்ட மனிதப் புதைகுழிகள் உள்ளன. இம்மனிதப் புதைகுழிகளின் அகழ்வுக்கு லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவினால் வெளிப்படுத்தப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியே முன்னோடியாக அமைந்திருக்கிறது.
இதற்கு முன்னர் அகழப்பட்ட மனிதப் புதைகுழிகளுடன் ஒப்பிடுகையில் தற்போது அகழப்பட்டு வரும் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி மிகப்பாரதூரமானதாகும். ஏனெனில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட 32 வாரங்களில், ஒப்பீட்டளவில் குறுகிய நிலப்பரப்பில் இதுவரை 141 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது சாதாரண விடயமல்ல.
அத்தோடு இந்த மனிதப் புதைகுழிகள் அரசின் முயற்சியால் கண்டறியப்பட்டவை அல்ல. மாறாக பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஏதேனுமொரு சிவில் செயற்பாட்டின்போது தற்செயலாகக் கண்டறியப்பட்டவையாகும். எனவே எவ்வித சாட்சியமும் இன்றி மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இந்த உயிர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். இம்மனிதப் புதைகுழிகள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உண்மையை புதைக்க முடியாது என்பதையே காண்பிக்கின்றன” என்றார்.










