முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு மாவட்ட நம்பிக்கை நிதியம், முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவை இணைந்து முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களின் ஆளுமைத் திறனை வெளிக்கொணரும் வகையிலும், சதுரங்க திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசியவீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட சதுரங்கப் போட்டி இவ்வாண்டு முதல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்தடவையாக தேசியவீரன் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட இவ்வாண்டுக்கான சதுரங்கப் போட்டி இன்றும், நாளையும்( 16,17) மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.
இன்றய தினம் மாவட்ட செயலாளர் திரு.அ.உமா மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய தொடக்க நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகவும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து போட்டியை ஆரம்பித்து வைத்தனர். இவ் ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி திரு.தனஞ்சயன் மற்றும் போட்டி இணைப்பாளர் பொறியியலாளர் திரு.சுஜாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகள் 6, 8, 10, 12, 14 மற்றும் 19 வயதுக்கு கீழ் ஆகிய பிரிவுகளில் ஆண், பெண் தனித்தனியான பிரிவுகளாக நடத்தப்படுகின்றது. முதற்தடவையாக நடாத்தப்படும் இப்போட்டியில் சுமார் 800 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி வருகின்றனர்.
போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களிற்கு.பணப்பரிசு, வெற்றிக்கிண்ணம், தங்கப்பதக்கம், வெற்றிச் சான்றிதழ் என்பன வழங்கப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பிரிவிலும் 4 தொடக்கம் 10 வரையான இடங்களைப் பெறுவோருக்கு பதக்கங்களும், வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். அத்துடன் போட்டியின் சகல சுற்றுக்களிலும் முழுமையாக பங்குபற்றுபவர்களுக்கு பங்குபற்றுதல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் அதிக வீதமான மாணவர்கள் பங்குபற்றும் முதல் மூன்று பாடசாலைகளுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.













