பாதாளக் குழுக்களுக்கு அடியோடு முடிவு கட்டுவோம் என்று புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“பாதாளக் குழுக்களைச் சேர்ந்த குற்றவாளிகள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று, இங்கு குற்றங்களை வழிநடத்துகின்றனர். தமது சொந்தப் பெயரில் கூட முன்னிலையாகத் துப்பில்லாத அந்தத் தரப்பினருக்கு இதற்கு முன்னர் கிடைக்கப் பெற்று வந்த அரசியல் பாதுகாப்பு தற்போது கிடைப்பதில்லை.
மேற்படி குற்றவாளிகளின் பின்னணியில் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் அரசியல் பாதுகாப்பு இருந்தது. இது அனைவருக்கும் தெரியும். தற்போது அந்தப் பாதுகாப்பு கிடைப்பதில்லை.
எனினும், இங்குள்ள போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், முப்படைகளில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் சில பொலிஸ் அதிகாரிகளைப் பாதாளக் குழுவினர் பயன்படுத்துகின்றனர்.
அத்துடன், இதற்கு முன்னர் அரசியல் பாதுகாப்பை வழங்கிய தரப்பினரை நேரடியாக – முறைமுகமாக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.










