கவிஞரும், எழுத்தாளரும், விரிவுரையாளருமான திரு. மேகராசா அண்ணனைப் பற்றி தனிப்பட்டரீதியில் சொல்வதாயின் அவர்கள் எனது மரியாதைக்கும், அன்புக்கும் நெருக்கமானவர். சிறிதுகாலப் பழக்கம் என்றாலும் நானும், அவரும் பிறந்த இடம் மட்டக்களப்பின் அரசடித்தீவு பிரதேசம் என்பதால் பிறப்பாலும் ஒரு மண்வாசனை எம்மை ஈர்க்குறது என்றே கூற வேண்டும்.
எழுத்து உலகத்துள்ளும், வாசிப்பு உலகத்துள்ளும் எனக்கு பல ஆலோசனை வழிகாட்டுதல்களை அழைக்கும் போதெல்லாம் சலிக்காது கூறுவார்.
நூல் பற்றிக் கூறுகையில், தனது முன்னைய நூல்களை விட அதிக ஊர் வாசம் மணக்குகிற சொல்லாடல்களையே இதில் பயன்படுத்தி உள்ளார். தமிழ் சமூகத்தின் மீதான அழித்தொழிப்பு, இரத்த வாடை, கொடுமை போன்ற சமூக நோக்கையும் பதிவு செய்ய அவர் தவறவில்லை எனலாம்.
தனது ஊர் படுவாங்கரை பகுதியைச் சேர்ந்ததை மெருகூட்டி அன்பும், செழிப்பும் மணக்க மணக்க கவிதையை சமைத்து வைத்துள்ளார். விரும்பியவர்கள் உண்டு மனமகிழலாம். மேரா என்ற சுருக்கப் பெயரோடு தொடர்ந்து எழுதும் அண்ணனின் கவிதைகளின் வீச்சை இதில் சில காட்டும்.
வாழ்க எம் படுவான்கரையே எனும் தலைப்பில்……
“நீண்ட வாவி படுத்திருக்கும்
அதன் மேற்கே நீ
படுவான்கரையென எழுந்தாய்
உழவே தலையெனக் கொண்ட
உழவோரின் முயற்சி பலித்திட
முற்றித்திரண்ட கதிர்மணிகள்
கூத்தும் கரகமும் ஆடி
கும்மி கொட்டி மகிழ்வுகொள்
கிழட்டு பெருநிலமே நீ
ஓர்மத்தோடு என்றும் நில்
திரண்டெழுந்த பகையை
அன்று
நின்றே வெறியாடிய நீ
கொடுங்கோல் எழும் காலத்தே இன்று
பீரங்கியாய் நிமிர்ந்து நில்.
களமாடிய வீரரின்
மறம் நிகர்த்து
குடும்பிமலையில் ஏறி நின்று
அடிக்கடி சிலிர்த்துக்கொள்.”
உங்களால் கொல்லப்பட்டோம் எனும் தலைப்பில்…….
“வானும் நிலனும்
ஆயிரம் கண்களும் பிறவும்
சாட்சியாக
உங்களால் கொல்லப்பட்டோம்
உடல் ஒளித்தல்
மானமெனக் கொண்ட எம்மை
நிர்வாணப்படுத்தியதும்
வன்புணர்வுக்குட்படுத்தியதும் தான்
உம் போர் வெற்றி
உங்கள்
அக்காவை
அம்மாவை
சகோதரியை
நிர்வாணப்படுத்தியும்
குறிகளைச் செலுத்தி சிதைத்தும் தான்
தெருக்களில் பரணி பாடினீர் “
ஊரப்பா எனும் தலைப்பில்……
“பூழை வழிந்த கண்கள்
ஊத்தை விளையாடி மகிழ்ந்த கால்கள்
அவரை கண்டதும் புனிதம் பெறும்
பனைமரக்கருக்கு கிழித்த முட்டி வயிறு
பொத்தானை விரும்பாத
ஆடையை உடனே நேசிக்கும்
ஊரப்பா என்னைத் தூக்கிக் கொஞ்சுவார்
மீசையோடு வெத்திலாக்கு வாயும்
கன்னத்தில் முத்தம் கொடுக்கும்
சாராய நாற்றம் மூக்கில் பீச்சும் “
2020 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் கிராமத்து சொற்கள் பலவற்றை சுமந்து செல்வது கிராமவாசியான எனது மனதிற்கு மறைமுகமாக ஆனந்தம் தந்தது எனலாம்.
நீண்ட காலம் இடைவெளி இல்லாது தொடர்ந்தும் அண்ணனின் எழுத்து வாசகர் உள்ளத்தை தாலாட்ட வேண்டும் என்பதே எனது பெரும் அவா..!
நன்றி
எழுத்தாளர்,
விமர்சகர்
ஆதன் குணா












