“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பல சதித்திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்” என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் ஊடக சந்திப்பு இன்று (15) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பல சதித்திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
அந்த வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தனது வீட்டில் எதிர்க்கட்சியினரையும், தோல்வி கண்ட பல எதிர்க்கட்சியினரையும் இந்த நாட்டை வீழ்த்தி இந்த நாட்டை ஒரு வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த 76 வருடங்களை இந்த நாட்டை ஆட்சி செய்து சீரழித்தவர்களை ஒன்று சேர்த்து புதியதொரு சதித்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.
இவர்களின் இந்தச் செயற்பாட்டின் ஊடாக நாட்டின் ஸ்திரத்தன்மை அல்லது இந்த நாட்டின் அரசியலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் தேசிய மக்கள் சக்தி மீது உமது மக்களின் ஆதரவோடுதான் இந்த அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.
ஆகவே மக்களின் மனதை வென்ற இந்த அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு முயற்சியையும் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு இருந்தாலும் அவர்களால் இந்த நாட்டை வீழ்த்த முடியாது. இந்த அரசாங்கத்தையும் வீழ்த்த முடியாது என்பதனை மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
இந்த நாடு முன்னோக்கி செல்லுகின்ற நேரத்தில் இவ்வாறான சதித்திட்டங்களை இவர்கள் தீட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். இவர்களது சூழ்ச்சியில் சிக்கிடாது இந்த நாட்டை சிறந்த பாதைக்கு கொண்டு சேர்க்கின்ற இந்த அரசாங்கத்திற்கு மேலும் பலத்தை வழங்கக்கூடியதாக நீங்கள் அமைந்திருக்க வேண்டும்.
உங்களது பார்வையை மிகவும் அவதானமாக செலுத்துங்கள். இவ்வாறான இந்த சூழ்ச்சியில் இருந்து இந்த நாட்டை மீட்பதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இந்த நாட்டிலே ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.
அதேபோன்று எமது பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர இருக்கின்றார்கள். இதனையும் எதிர்க்கட்சியின் ஒரு சூழ்ச்சியாகத்தான் நாங்கள் கருதுகின்றோம். இவ்வாறான சூழ்ச்சிகளால் இவர்கள் எங்களை வீழ்த்த முடியாது. அத்தோடு இதனை நடைமுறைப்படுத்தவும் முடியாது. இவர்கள் என்னதான் முயற்சிகளை முன்னெடுத்தாலும் இந்தப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும் எந்த ஒரு தீர்மானமும் நிறைவு செய்யப்படாது. அவர்களது எந்தச் சூழ்ச்சியும் இந்த நாட்டில் எடுபடாது என்கின்ற விடயத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்தப் பிரதி அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்படுகின்ற நம்பிக்கையில்லா பிரேரணையில் எந்த ஒரு விடயமும் இல்லை. அதே நேரம் இவ்வாறானதொரு நம்பிக்கையில்லா பிரேரணையை அவர்களால் முன்வைக்க முடியாது. இது எந்த வகையிலும் அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டு இருக்கின்றதா என்கின்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்திருக்கின்றது. ஆகவே இது தீர்க்கப்பட முடியாத அல்லது பிரேரணிக்க முடியாத ஒரு பிரேரணையாக அமையப் போகின்றது” என்றார்.










