புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு சுதந்திரபுரம் வீதி அபிவிருத்திப் பணிகள் நேற்றைய தினம் (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கு விஜயத்தின் போது விஷேட நிதி ஒதுக்கீடாக 5000 மில்லியன் ரூபா நிதியினை முல்லைத்தீவு மாவட்ட வீதி புனரமைப்பிற்காக ஒதுக்கியிருந்தார். குறித்த நிதியில் 150 மில்லியன் ரூபாவில் வீதிப் புனரமைப்பு பணியானது மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
சுதந்திரபுரம் பிரதான வீதியானது நேற்றைய தினம் 6.5 கிலோமீற்றர் வரை காபெற் வீதியாக மாற்றி அமைக்கும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செ.திலகநாதனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த வீதி அபிவிருத்தி பணியின் ஆரம்ப நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர், பிரதம பொறியியலாளர்,
நிறைவேற்று பொறியியலாளர், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த வருடத்திற்குள் குறித்த வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.














