வவுனியா மாநகர சபையின் ஆதனவரி தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று இடம்பெற்ற நிலையில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
வவுனியா மாநகர சபையின் ஆதனவரி தொடர்பான விசேட அமர்வு நேற்று காலை இடம்பெற்றிருந்தது. கடந்த அமர்வில் சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஆதனவரியினை குறைக்குமாறு தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய சில உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில் அதுதொடர்பாக ஆராய்வதற்கு விசேட அமர்வு ஒன்று நடாத்தப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அதற்கமைய நேற்றைய அமர்வு இடம்பெற்றது.
இதன்போது இந்த விடயத்தை குழுநிலை விவாதமாக நடாத்த வேண்டும் என சபை உறுப்பினர் சு.விஜயகுமார் வேண்டுகோள் விடுத்தார். அதற்கமைய குழுநிலை விவாதமாக நடாத்துவதற்கு சபையால் தீர்மானிக்கப்பட்டது.
குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதனவரியை குறைக்க வேண்டும் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தக்கூடாது என்றும் சிலவட்டாரங்களில் உள்ள மக்கள் இதனால் கடுமையாக பாதிப்படைவார்கள் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மாநகரசபையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவதற்கு நிதி பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளமை, மற்றும் ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றை சுட்டிக்காட்டி ஆதனவரியை குடியிருப்புக்களுக்கு 8 வீதமாகவும், வர்த்தக நிலையங்களுக்கு 10 வீதமாகவும் அறவிடவேண்டிய தேவை இருப்பதாக ஆளும்தரப்பு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து 8:10 என்ற அடிப்படையிலேயே ஆதனவரியை அறவிடுவதுடன் அடுத்தவருடம் அதில் மாற்றத்தை செய்யமுடியுமா என ஆராயலாம் என குழுநிலை விவாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குழுநிலை விவாதம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த விவாதம் முடியும் வரை ஊடகவியலாளர்கள் வெளியில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. குழு நிலை விவாதம் முடிவடைந்த பின்னர் ஊடகங்கள் செய்தி சேகரிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை இனிவரும் காலங்களில் வவுனியா மாநகர சபையின் அமர்வில் கலந்துகொள்வதற்கு ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ஊடகங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என சபை உறுப்பினர் பிரேமதாஸ் முன்மொழிந்திருந்தார். சக உறுப்பினர் பர்ஸ்சான் அதனை வழிமொழிந்தார். இதனையடுத்து இனிவரும் காலங்களில் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது ஊடக அமைச்சின் அடையாள அட்டையை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் சபை அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என சபை தீர்மானித்துள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர்,
செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு தனியான பிரத்தியேக இடம் வழங்க வேண்டும். இவ்வாறு உள்ளே எல்லாம் வரமுடியாது. ஆனால் நாங்கள் இடப்பற்றாக்குறையால் விட்டுள்ளோம். எனவே ஊடகவியலாளர்களுக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்படும் என்றார். அத்துடன் சபை அமர்வுகளை இனிவரும் காலங்களில் நேரலையில் ஒளிபரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.













