இங்கிலாந்து நாட்டின் லங்காஷைர் பகுதியில் பிளாக்பர்ன் நகரில் விட்டன் கன்ட்ரி என்ற பெயரிலான பூங்காவுக்கு பலரும் வருகை தருவது வழக்கம். இதன்படி, தங்களுடைய 9 வயது மகன் மற்றும் 5 வயது மகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு வாசிம் கான், அவருடைய மனைவி மடியா கவுசர் (வயது 32) ஆகியோர் சென்றனர்.
வாசிம் கான், பூங்காவில் மகனுடன் காற்பந்து விளையாடி பொழுது போக்கினார். அப்போது, வேறு திசையில் பந்து ஓடிச் சென்றது. இதனால், அதனை எடுக்க மகனுடன் கான் சென்றார்.
கவுசர், மகளை மடியில் வைத்தபடி இருந்துள்ளார். அப்போது, திடீரென மரம் ஒன்று முறிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கவுசர் உஷாராவதற்குகுள் மரம் மேலே விழுந்து விட்டது. கடைசி நேரத்தில் மகளை தூர தள்ளி விட்டு, காப்பாற்றினார். எனினும், அவர் மரத்திற்கு கீழே சிக்கி கொண்டார்.
இதனை பார்த்ததும் வாசிம் கான் ஓடி வந்துள்ளார். மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்த மனைவியை காப்பாற்ற நீண்டநேரம் போராடினார். எனினும், அதில் பலனின்றி கவுசர் உயிரிழந்தார்.
இதுபற்றி வாசிம் கான் கூறும்போது, “மரம் திடீரென முறிந்து விழும் சத்தம் கேட்டது. காற்று கூட அப்போது வீசவில்லை. வேறு எதுவும் நடக்கவில்லை. நான் ஓடிச்சென்று அவளை காப்பாற்ற முயன்றேன். அப்போது அவள் உயிருடனேயே காணப்பட்டாள்” என்றார்.










