இயற்கை வளங்களாலும் இறைவனின் ஆசீர்வாதத்தாலும் சூழப்பட்ட எமது நாடு 30 வருட யுத்தத்தால் பலவற்றை இழந்தது. இலட்சக்கணக்கான மனித உயிர்கள், அபிவிருத்தி, கல்வி, பொருளாதாரம், சுதந்திரமான மனித செயற்பாடு என பலவற்றை இந்த 3 தசாப்த யுத்தம் இலங்கையர்களிடமிருந்து பறித்தது என்பதை மறுக்க முடியாது. 2009 இல் யுத்தம் மௌனிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதனுடைய வடுக்களை இன்றும் இலங்கையர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதற்கு பல சான்றுகள் எம்முன் இருக்கின்றன.
குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற மாகாணத்தில் பல ஆயிரம் பேர் தங்களது அவயவங்களை இழந்து ஒவ்வொரு வினாடியையும் கடத்துவதில் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதேபோல் வீடு வாசல்களை இழந்து சொத்துக்களை இழந்த மக்கள் தமது பொருளாதார – வாழ்வாதார தேவைகளுக்காக பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். பெண்களை தலைமையாக கொண்ட பல குடும்பங்கள் நாளாந்த செலவை சமாளிக்க பெரும் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுடைய சோகக் கதைகள் நீண்டு செல்லும் அதேவேளை, மறுபக்கம் யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த பல வீதிகள் மெல்ல மெல்ல மக்களுடைய பாவனைகளுக்கு விடுவிக்கப்பட்டு வந்தாலும் பெருமளவான காணிகள் – வீதிகள் தொடர்ந்தும் யுத்த கால சூழலை நினைவுபடுத்துவதாக தொடர்ந்தும் இருப்பது மக்களின் உணர்வுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், யுத்தம் நடைபெற்ற பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 40 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதிகள் சில மீளத் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது என்றாலும்,
யுத்தமே நடைபெறாத நம் நாட்டின் மலையக பகுதியில் 19 வருடங்களுக்கு மேலாக ஒரு வீதி மூடப்பட்டிருப்பது எம் கவனத்துக்கு வந்திருக்கிறது.
ஆம், கொட்டகலை நகரத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையானது எரிங்டன், ஸ்டோனிக்கிளிப் 3 தோட்டங்களுக்கும் மற்றும் மேபில்ட் வழியாகவும், போகாவத்தை வழியாக நாவலப்பிட்டி நகரத்திற்கும் செல்லும் வீதியே இவ்வாறு 19 ஆண்டுளுக்கு மேலாக மூடப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட தோட்டங்களுக்கும் பிரதேசங்களுக்குச் செல்வோர் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இப்பாதை செல்லும் வழியில் எரிபொருள் சேகரிப்பு நிலையம் ஒன்று அமைந்திருப்பதால் குறித்த எரிபொருள் சேகரிப்பு நிலையத்தின் பாதுகாப்புக்காக 19 வருடங்களுக்கு மேலாக குறித்த பாதை மூடப்பட்டு பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் பல பாரிய எரிபொருள் சேகரிப்பு நிலையங்கள் காணப்படும் வீதிகள் தற்போது வரை திறந்து மக்கள் பாவனையில் உள்ளமை காணக்கூடியதாக கொட்டகலை மக்கள் தெரிவிக்கின்றனர். இவ் வீதி மூடப்பட்டுள்ளமையினால் பாடசாலை மாணவர்கள் அன்றாட தொழிலுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மாற்று வீதியினூடாக பயணம் செய்கின்றனர்.
மேலும் கொட்டகலை ரயில் நிலையத்திற்கு கொட்டகலை நகரத்திலிருந்து செல்வதாக இருந்தால் 2–3 கிலோ மீற்றர் சுற்றி தான் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த மூடப்பட்டிருக்கும் வீதியினை திறந்தால் நகரத்திலிருந்து 300 மீற்றர் தூரத்திலேயே ரயில் நிலையம் செல்ல முடியுமெனவும் அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் நடந்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த பல வீதிகள் இன்று திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யுத்தமே நடைபெறாத ஒரு பகுதியில் அமைந்துள்ள வீதி, யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்தும் ஏன் திறக்கப்படாமல் இருக்கிறது என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொட்டகலை நகரத்திலிருந்து ரயில் நிலையம் மற்றும் எரிங்டன், ஸ்டோனிக்கிளி்ப், போகாவத்தை செல்லும் வீதியினை திறந்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.















