ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட், டிக்கோயா, தலவாக்கலை, கொட்டகலை என பல பிரதான நகரங்களிலும் மற்றும் அப்பிரதேசங்களை அண்டிய தோட்டங்களிலும் வாழும் மக்கள் ஹட்டன் பிரதான பேருந்து தரிப்பிடத்திலிருந்தே கண்டி, கொழும்பு என நாட்டின் முக்கிய பிரதான நகரங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதியை பெற முடியும்.
அந்தவகையில் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் மல்லியப்பு சந்தி உள்ளது. ‘மல்லியப்பு’ சந்தி ஹட்டன் கொழும்பு கண்டி தலவாக்கலை பாதை சந்திக்கும் பிரதான சந்தியாகும். தினமும் இந்த சந்தியை கடந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இவற்றுள் நுவரெலிய உட்பட இப்பிரதேசத்திற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும் பிரதானமானவை ஆகும்.
நுவரெலியா, தலவாக்கலை, மற்றும் கண்டி, கொழும்பு பிரதான பாதையை சந்திக்கும் மைய பிரதேசமே மல்லியப்பு சந்தியாகும்.
சாதாரணமாக நுவரெலியா தலவாக்கலையிலிருந்து ஹட்டன் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பயணிகள் மல்லியப்பு சந்தியில் இறங்கி கண்டி, கொழும்பு பேருந்து போக்குவரத்தினை பெறமுடியும்.
ஆனால் குறிப்பிட்ட மல்லியப்பு சந்தி பேருந்து நிறுத்தும் தரிப்பிடத்திலிருந்து 1 கிலோ மீற்றர் வரை வீதியின் இடது புறத்தில் வீதி பாதுகாப்புக்கு சிறிய தூண்களே காணப்படுகின்றது. இப்பகுதியானது ஏறக்குறைய 50 தொடக்கம் 300 அடி வரையிலான பள்ளங்களைக் கொண்டு காணப்படுகிறது.
இதனால் இப்பகுதிகளில் பிரயாணம் செய்யும் போது வாகன சாரதிகளும், பிரயாணிகளும் மிகுந்த அச்சம் அடைகின்றனர். அத்துடன் வாகனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் வீதித் தடுப்பு கற்களை உடைத்துக்கொண்டு பாரிய விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
அண்மையில் ஹட்டனிலிருந்து கண்டிக்குச் சென்ற பேருந்து ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறான பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாதம் கதிர்காமத்திலிருந்து வந்து கொத்மலை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி 24 உயிர்களை காவு கொண்ட அப்பாதையிலும் வீதி பாதுகாப்பு வேலி காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் விபத்தானது சாரதிகள், பயணிகள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.
எனவே பாரிய பள்ளங்கள் காணப்படும் இடங்களுக்களுக்கு இரும்பிலான பாதுகாப்பு தடுப்பு வேலிகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம் பாரிய விபத்துகளில் உயிர்கள் காவுகொள்வதை தடுக்க முடியும்.
ஹட்டன் நகர சபையினரே, வீதி அதிகார சபையினரே இது உங்களின் கவனத்திற்கு, இனியும் தாமதம் வேண்டாம் இரும்பு தடுப்பு வேலிகளை இவ் வீதியில் அமைப்பதன் மூலம் வீதி விபத்துக்களை ஓரளவேனும் குறைத்து உயிரிழப்புகளை குறைக்க முடியும் என வாகன சாரதிகளும், பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சுமார் 500 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 40 இடங்களுக்கான பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.














