வவுனியா மாநகர சபையால் நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டு புதிதாக அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் பிரமாண்டமாக எழுந்த கடையால் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாநகர சபையானது வீதிப் போக்குவரத்துக்கு தடையாக இருந்த இலுப்பையடிப் பகுதி உள்ளிட்ட நகரப் பகுதியில் இருந்த நடைபாதை வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தியதுடன், குறித்த வியாபாரிகளுக்கு வவுனியா மாநகர சபை முன்பாகவும், பொலிஸ் நிலையம் முன்பாகவும் 10 இற்கு 8 என்ற அளவுப் பிராமணத்தில் கடைகளை வழங்கியிருந்தது.
இவ்வாறு வழங்கப்பட்ட நிலையில், வவுனியா மாநகர சபை முன்பாக வழங்கப்பட்ட கடைத் தொகுதியில் வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நிரந்தர வர்த்தக நிலையத்தை வைத்துள்ளவரும், ஏற்கனவே நடைபாதை வியாபாரத்தை நடாத்தாமல் இருந்தவருமான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மருமகன் என மூவருக்கு ஏனைய தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளுக்குச் செல்லும் பாதையில் கடை வழங்கப்பட்டு அவை மூன்றும் 25 இற்கு 30 என்ற அளவில் ஒரு பெரும் கடையாக நிலையான கற்கள், சீமெந்து, கம்பி என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
ஆனால், ஏனைய வர்த்தகர்கள் வெறும் நிலத்தில் தகரம் போட்டு வர்ததக நிலையங்களை அமைத்து வருகின்றனர். முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்ட குறித்த பெரும்பான்மை இனத்தவரின் வர்த்தக நிலையத்தை அகற்ற மாநகர சபை உத்தியோகத்தர்கள், சபை உறுப்பினர்கள் நடவடிக்கையை எடுத்து குறித்த வியாபார நிலையம் அமைக்கப்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டு அவை அகற்றப்பட்டன.
இருப்பினும், மறுநாள் குறித்த வியாபார நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் சில உறுப்பினர்கள், மாநகர சபை பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி இடம்பெற்று அது தற்போது முழுமை பெற்றுள்ளது. ஏனைய தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ஒரு நிலைப்பாடும், பெரும்பான்மையின செல்வாக்கு மிக்க வர்த்தகருக்கு ஒரு நிலைப்பாடும் எடுக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த கட்டுமாணம் தொடர்பில் உத்தியோகத்தர்கள் குறித்த வியாபாரியிடம் கேட்டபோது, இரவு 11 மணியளவில் பொலிஸார் தடுத்து நிறுத்தி குறித்த கட்டுமாணம் நிறுத்தப்பட்டாலும் இரவு 1 மணிக்கு அனுமதி பெறப்பட்டு மறுநாள் கட்டியதாக தெரிவித்துள்ளனர். குறித்த நடவடிக்கை தொடர்பில் சபையில் பல உறுப்பினர்களும், மாநகர சபை உத்தியோகத்தர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.












