நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.
இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையாலும், நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் விடுமுறை நாட்கள் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளமையால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடுமுறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை காரணமாக நுவரெலியா பிரதான நகர், ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, கிறகறி பூங்கா, கிறகறி வாவிக் கரையிலும், உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்றுச் சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றன.
அத்தோடு நுவரெலியா கிறகரி வாவிக் கரையில் அமைக்கப்பட்டுள்ள காணிவேல் களியாட்ட நிகழ்வுகளிலும், மட்டக்குதிரை சவாரி செய்யும் இடத்திலும் பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்படுகின்றனர்.
இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகனத் தரிப்பிடங்களிலும், நுவரெலியா – பதுளை , நுவரெலியா – கண்டி, நுவரெலியா – ஹட்டன் போன்ற பிராதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதனால் வாகனங்கள் அணிவகுந்து ஊர்ந்து செல்கின்றன. இதனால் பிரதான நுழைவாயில் சோதனை சாவடி, நகர்ப் பகுதிகளில் கூடுதலாக போக்குவரத்து பொலிஸாரை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை துரிதமாக சீர்செய்து வருகின்றனர். அத்துடன் பொது இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.











