இந்த நாட்டில் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா கூட்டத்தொடரின்போது இதற்கான குரல் ஒலிக்கவேண்டும். எதிர்வரும் 30 ஆம் திகதி நடாத்தப்படும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தப் பிரச்சினை பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சினைகள் மட்டுமல்ல. முழு தமிழ் இனத்திற்கான பிரச்சினை. எனவே இந்தப் போராட்டத்திற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப தலைவியும், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவியுமான திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு ,அம்பாறை, திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கங்களின் தலைவிகள் பங்குகொண்ட ஊடக சந்திப்பு இன்று (07) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அ.அமலநாயகி, “பல ஆண்டு காலமாக எமது உறவுகளுக்கு நீதி கோரி போராடியபோதிலும் 17 வருடமாக இலங்கை அரசாங்கம் நீதியை வழங்க மறுத்ததன் காரணமாக சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாகவே எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சர்வதேசத்தினை நோக்கி எங்களது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜ.நா அமர்வில் இலங்கை தொடர்பான பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும். அதில் வெளியிடப்படும் அறிக்கைகளில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சாதகமான அறிக்கையாக இருக்கவேண்டும். பல்வேறு நாடுகளும் எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் அழுத்தங்களை வழங்கவேண்டும் என்பதற்காகவே எதிர்வரும் 30 ஆம் திகதி பாரிய போராட்டங்களை வடகிழக்கில் பாதிக்கப்பட்ட சங்கமாக வடக்கிலும், கிழக்கிலும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
செம்மணியில் மீட்கப்பட்ட பொருட்களை வைத்து அவர்களை அடையாளப்படுத்துமாறு கோரியிருந்தார்கள். குடும்பம் குடும்பமாக பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அடையாளப்படுத்துவதற்கு அந்தக் குடும்பத்தில் யாரும் இல்லாத நிலையிருந்தால் அந்த பொருட்கள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும். அதற்காக விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை முன்னெடுத்து சர்வதேச ரீரியான விசாரணையொன்று அதன் ஊடாக நடாத்தப்பட்டு அவை இனங்காணப்படவேண்டும்.
அதனைவிடுத்து பால் போத்தலைக் கொண்டோ, புத்தக பைகளைக் கொண்டோ அடையாளப்படுத்த முடியாது. உள்ளகப் பொறிமுறை ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் காலம் காலமாக உள்ளகப் பொறிமுறை ஊடாக ஏமாற்றப்பட்ட சமூகமாக போராடி வருகின்றோம். காலத்தினை இழுத்தடிப்பு செய்வதற்காகவும், சர்வதேசத்தின் அழுத்தங்களை குறைப்பதற்காகவும் இந்த உள்ளகப் பொறிமுறை என்ற விடயத்தினை தற்போதைய அரச தலைவரும் முன்னெடுத்து வருகின்றார்.
எனவே எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் போராட்டமானது எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக வடகிழக்கில் காலம் காலமாக நடைபெற்ற இன அழிப்பும், எங்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கும், எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட விடயங்களுக்குமாகவே பாதிக்கப்பட்ட தாய்மார்களாக இந்தப் போராட்டத்தில் இறங்குகின்றோம்.
எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் போராட்ட பேரணியானது மக்கள் பேரணியாக அமையவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய பரப்பில் செயற்படும் அனைத்து அரசியல்வாதிகளும், அனைத்து உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக இந்த நாட்டில் தமிழ் இனத்திற்கு நடைபெற்ற இன அழிப்பு என்பதை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாபெரும் மக்கள் சக்தியாக இந்தப் பேரணியை உருவாக்கவேண்டும்.
எதிர்வரும் ஜ.நா அமர்வில் இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் இன்னும் கால நீடிப்பினை வழங்காமல் சர்வதேசம் நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும். இந்த நாட்டில் காலத்திற்கு காலம் வரும் ஜனாதிபதிகள் புதிய சட்டங்களையும், அலுவலகங்களையும் உருவாக்கிவிட்டு செல்கின்றார்களே தவிர எங்களுக்கான எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை.
செம்மணி புதைகுழி உட்பட கிழக்கிலும் சாட்சியங்களுடன் உள்ள புதைகுழிகளும் தோண்டப்படவேண்டும். சர்வதேச நிபுணத்துவத்தின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டு தோண்டப்படவேண்டும். அத்துடன் கடந்த காலத்தில் இவ்வாறான சம்பங்களுடன் தொடர்புபட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்” என்றார்.










