குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இந்தியா நாட்டைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் 43 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களும் ஆவார்.
கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜைகள் மூவரும் வர்த்தகர்கள் ஆவர்.
குறித்த இந்திய பிரஜைகள் மூவரும் இன்றைய தினம் அதிகாலை வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பின்னர் இந்திய பிரஜைகள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ 160 கிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனுடைய பெறுமதி 12 கோடியே 10 இலட்சம் ரூபா ஆகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.










