கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நாளை (02) புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது.
இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்ட ஆலயம் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமானது.
கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 26 ஆம் திகதி தொடக்கம் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை வரையில் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நாளை ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் காலை 6 மணிக்கு கிரியைகள் விநாயகர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
முற்பகல் 11.05 தொடக்கம் 11.55 மணி வரையில் உள்ள ஆனி உத்தரமும், அமிர்தசித்தயோகமும் கூடிய கன்னி லக்ன சுபமுகூர்த்தவேளையில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.



