அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று அறிவித்து, ஈரான் மதத்தலைவர் அயதுல்லா மாகேரம் ஷிராஜி பத்வா பிறப்பித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் நாட்டு தலைவர்களிடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது.
ஈரான் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன். அவர் நன்றியில்லாமல் இருக்கிறார் என்று அமெரிக்க ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தநிலையில், அயதுல்லா அலி கமேனியை அவமதிக்கும் விதமான பேச்சுக்களை தவிர்த்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரமுடியும் என்று, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
இதற்கு மத்தியிலேயே ஈரான் ஆட்சியாளர் கமேனியை கொல்ல திட்டமிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாட்டின் மதத் தலைவர்களில் ஒருவரான அயதுல்லா மாகேரம் ஷிராஜி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று கூறி பத்வா பிறப்பித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் மதகுருவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது தடை செய்யப்பட்டுள்ளமையால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறை தண்டனை உறுதி என்று ஈரான் மதத்தலைவர் அயதுல்லா மாகேரம் ஷிராஜி தெரிவித்துள்ளார்.