மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முதல் அமர்வு இன்று அமளி துமளியாக 30/06/2025 இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தவிசாளர் தலைமையில் நடைபெற்ற இவ் அமர்வில் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய சபை அமர்வில் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா ஐந்து நிமிடங்கள் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
தவிசாளர் தமது கன்னி உரையின்போது, “முன்மாதிரியானதும், முன்னேற்றகரமானதும் அபிவிருத்தி அடைந்ததுமான எமது சபை தேசிய அடையாளத்தையும், கௌரவமும் பெறும் வகையில் நாம் பணியாற்ற வேண்டிய பொறுப்பினையும், கடமைப்பாட்டினையும் கொண்டுள்ளோம்” என்றார்.
இந்த சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கும் மற்றும் விளையாட்டு கழகங்கள், முக்கியஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தமது வட்டாரங்களின் நிலவும் குறைபாடுகள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள்.
இதேவேளை தவிசாளர் தெரிவு தொடர்பாக அவருக்கு எதிரான வார்த்தைப்பிரயோகங்களை ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் சபையில் பகிரங்கமாக முன்வைத்தனர்.
இதன்போது குறிக்கிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தவிசாளருக்கு ஆதரவான வாதப்பிரதிவாதங்களை முன்வைத்தனர்.
இதன்போது சபையில் அமளி துமளி அடிக்கடி ஏற்பட்டது. தவிசாளர் சபையினை கட்டுப்படுத்தி தொடர்ந்து சபை அமர்வினை திறன்பட வழி நடாத்தினார்.
மேலும் இச்சபையினை சிறப்பாக கொண்டு செல்வதற்காக ஆலோசனைக் குழுக்கள் நான்கினை பத்தாக விரிவுபடுத்தி விடயங்களை கையாளுவதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் தவிசாளர் தலைமையின் கீழ் சபை உறுப்பினர்களையும், இத்துறையில் தேர்ச்சி பெற்று வெளியில் உள்ள சமூக சேவையாளர்களையும் உள்ளடக்கியதாக குழுக்கள் அமைக்கப்பட்டன.
சபையில் தற்போது கடமையாற்றும் செயலாளர் தொடர்ந்து இச் சபையில் கடமையாற்றுவதற்கு சபையில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மாதாந்த சபைக் கூட்டமானது மாதக் கடைசியில் வரும் வியாழக் கிழமையும், அந் நாட்களில் லீவு நாளாக கருதினால் புதன் கிழமைகளில் நடாத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மஜ்மா நகர் சூடு பத்தினசேனை கொரோனா மையவாடிக்கு அலுவலக ஊழியர்களை கடமைக்கு அனுப்புவதை இடைநிறுத்தி தனியார் நிறுவனக் காவலாளி ஒருவரை பாதுகாப்பு கடமைக்காக நியமிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
சபையின் கொடுக்கல் வாங்கல், நிதிக் காசோலை நடவடிக்கைக்காக பொருத்தமான உத்தியோகத்தர்களை நியமித்தல், பி.எஸ்.டி.ஜி.வேலைத்திட்டம் மீளாய்வு மற்றும் மீராவோடை வாராந்த சந்தை தொடர்பான ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் நிலையை தீர்ப்பதற்கு விசேட கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி – 08, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 06, தேசிய மக்கள் சக்தி – 02 என உறுப்பினர்களை கொண்டுள்ளன. மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு என்பன தலா ஒரு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.

