உலகிலேயே மிக வறண்ட பாலைவனம் என்று அறியப்படும் சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக, இந்த பாலைவனத்தில் பல வருடங்களாக மழை பெய்ததற்கான எந்தப் பதிவும் இல்லாத நிலையில், தற்போது வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனி படர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அட்டகாமா பாலைவனம், அதன் வறண்ட நிலப்பரப்பு, உப்பு ஏரிகள், மற்றும் எரிமலைப் படிமங்களுக்காகப் புகழ்பெற்றது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூட, செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலப்பரப்புக்கு ஒப்பான பகுதியாக அட்டகாமா பாலைவனத்தைக் கருதுகிறது.
இவ்வளவு வறண்ட ஒரு பகுதியில் பனிப்பொழிவு நிகழ்ந்திருப்பது, காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான விளைவாகப் பார்க்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட அசாதாரண வானிலை மாற்றங்களே இந்த பனிப்பொழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான அதிசய நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் என்ற வகையிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.