புத்தளம், பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் நாவக்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு, துன்ஹல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தாரக கவிஸ்க தென்னகோன் எனும் சிறுவனும், 72 வயதுடைய ரணசிங்க மகள் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த பேருந்து நாவக்காடு பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, பாலாவி பகுதியில் இருந்து நுரைச்சோலை பகுதியை நோக்கி கோழி உர மூடைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த பாரவூர்தி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பேருந்தின் மீது மோதியுள்ளது.
இதன்போது குறித்த பேருந்து வீதியில் இருந்து இழுத்து செல்லப்பட்டு, வீதியோரத்தில் உள்ள வடிகானுக்குள் சரிந்து விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்து வீழ்ந்த வடிகானுக்குள் நீர் காணப்பட்ட போதிலும், பேருந்துக்குள் இருந்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற போது குறித்த பேருந்தில் 15 இற்கும் அதிகமானவர்கள் பயணம் செய்துள்ளதாகவும், அதில் 10 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

