வன்னியின் பெரும் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான 14வது வன்னியின் பெரும் சமர் நேற்றும் இன்றும் கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது இனிங்சில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 171ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 183 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. பதிலுக்கு தனது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 40 ஓட்டங்களுக்கு 08 இலக்குகளை இழந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வருவதாக நடுவர் அறிவிக்க 14வது வன்னியின் பெரும் சமர் சமநிலையில் நிறைவடைந்தது.
இதுவரை நடைபெற்ற 14 போட்டிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் நான்கு போட்டியில் வெற்றி பெற்றிருப்பதுடன் ஒரு போட்டியில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஒன்பது போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்திருக்கிறது.
போட்டியின் ஆட்டநாயகனாக கிளிநொச்சி மகா வித்தியாலய வீரர் கி.கிருஸ்ணமேனனும், சிறந்த பந்து வீச்சாளராக கிளிநொச்சி மகா வித்தியாலய அணியின் இ.விதுரனும், சகலதுறை வீரனாக கிளிநொச்சி மகா வித்தியாலய அணியின் கி.கிருஸ்ணமேனனும், சிறந்த களத்தடுப்பாளராக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியின் சு.டிலக்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.
பரிசளிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டார்.

