வவுனியா வடக்கு பிரதேச சபை தெரிவின் போது தவிசாளர் தி.கிருஸ்ணவேணி சபையில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினார். இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எழுந்து அஞ்சலி செலுத்தாது அமர்ந்திருந்தார்.
வவுனியா வடக்கு பிரதேசச் சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று மாலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவந்தினி தலைமையில் இடம்பெற்றது.
முதலில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. தவிசாளராக திருநாவுக்கரசு கிருஷ்ணவேணி தெரிவானார்.
அவரை அழைத்து அவருக்கான இருக்கையை வழங்கிய வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நன்றி கூற தவிசாளரிடம் ஒலிவாங்கியை கையளித்தார்.
இதன்போது மண்ணுக்கான போரில் வீரச்சாவடைந்த எங்களது மாவீரர்களுக்காகவும், இப்போரின் போது கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்காகவும் இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்துவோம் எனக் கூறி எழுந்து அகவணக்கம் செலுத்தினார்.
இதனையடுத்து சபையில் இருந்த பெரும்பான்மை இன உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும், சபை தெரிவுக்கு பிரசன்னமாகி இருந்த அனைவரும் எழுந்து அகவணக்கம் செலுத்தினர்.
இதனை சற்றும் எதிர்பாராத வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எழுந்து அகவணக்கம் செலுத்தாது இரண்டு நிமிடமும் அமர்ந்திருந்தார்.
இதில் தவிசாளர் செய்தது சரியா? அல்லது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செய்தது சரியா? என அங்கு கலந்து கொண்டவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
