ஈரான் அணு ஆயுதத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், இந்த மாத மத்தியில் திடீரென இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தில் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரான் அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் போர் மூண்டது. 12 நாட்களாக நடைபெற்ற போர் பின்னர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.
ஈரான் ஏவுகணைகளை இந்த THAAD ஏவுகணைகள் இடைமறித்தன. ஈரான் காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை 60 முதல் 80 முறை அமெரிக்காவின் THAAD ஏவுகணை சிஸ்டம் இடைமறித்து அழித்ததாக இராணுவ கண்காணிப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் THAAD சிஸ்டத்தை பயன்படுத்த 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும். 12 நாட்களாக நடைபெற்ற சண்டையில் அமெரிக்கா ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க 810 மில்லியன் முதல் 1.215 பில்லியன் டாலர் வரை செலவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
அமெரிக்காவிடம் உள்ள மொத்த THAAD களில் 20 சதவீதம் வரை செலவழித்திருக்கும் எனவும் கூறப்படுகின்றது. கடந்த வருடம் THAAD ஐ இஸ்ரேலில் அமெரிக்கா அமைத்தது.
அமெரிக்கா வருடத்திற்கு 50 முதல் 60 THAAD தான் உற்பத்தி செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா மற்றும் ஈரானின் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வகையில் அமெரிக்கா இதனை தயாரித்துள்ளது.