மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போன 5 மீனவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தேவேந்திரமுனை துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற எம்.டி.ஆர் 263 தினேஷ் 4 என்ற மீன்பிடிப் படகு, ஒரு வர்த்தகக் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மீன்பிடிப் படகிள் இருந்த ஐவர் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டார். இரு மீனவர்கள் இன்று பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், காணாமல் போன மற்றுமொரு மீனவர் இன்று மாலை உயிருடன் மீட்கப்பட்டு காலித்துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் ஒரு மீனவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தெற்குப் பகுதியில் களுத்துறையில் இருந்து புறப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.