யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பெரும் சிரமத்துக்குள்ளும் அசௌகரியமான சூழ்நிலைகளுக்குள்ளும் அர்ப்பணிப்புடன் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் குழுவினருக்குப் பொதுமக்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. தற்போதைய அகழ்வுப் பணிகளின் போதும், இதற்கு முன்னரும் அசௌகரியமான, அசாதாரணமான சூழ்நிலைகளில் பணிகள் இடைவிடாது மேற்கொள்ளப்படுகின்ற விடயம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, அகழ்வுப் பணிகள் இடம்பெறும் மனிதப் புதைகுழியில் இருந்து கூப்பிடு தூரத்திலேயே மயானத்தின் எரியூட்டும் கொட்டகை உள்ளது. இதனால், சடலங்கள் எரியூட்டப்படும் வேளைகளில் நிலவும் அசாதாரண சூழலின்போதும் பணியாளர்கள் பணிகளைத் தொய்வின்றியும், பின்னடைவு இல்லாமலும் நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த விடயத்துக்குப் பல தரப்பினரும் தமது பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.