கிராமப்புற மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை மாவட்ட மட்டத்திலான தமிழ்மொழி தினப் போட்டியில் தமது பிள்ளைக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து குறித்த பெற்றோரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரால் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயமாவது,
மாவட்டமட்ட தமிழ்மொழித் தினப் போட்டி தொடர்பானது.
மேற்படி விடயம் தொடர்பாக இல-57/C சம்பூர் கிழக்கு, மூதூர் இல் வசிக்கும் திருமதி வி. கிரிசாந்தினி ஆகிய நான் தங்களிடம் அறியத் தருவது யாதெனில் கடந்த 21.06. 2025 ம் திகதி மாவட்ட மட்ட தமிழ்மொழி தினப் போட்டியானது கந்தளாய் பரமோஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது .
இந்தப் போட்டி நிகழ்வில் தி/மூ/சம்பூர் மகாவித்தியாலயத்தின் பிரிவு 4 தனி நடனப் போட்டியாளராக எனது மகள் வி.விகிசனா பங்குபற்றினார். போட்டி நிகழ்வு நிறைவு பெற்று அன்றைய தினம் பி.ப 02.00 மணியளவில் பெறுபேறு காட்சிப்படுத்தபட்டது.
இதில் எனது மகளான தி/மூ.சம்பூர் மகாவித்தியாலயம் வி. விகிசனா முதலாம் இடம் என்றும் புனித மரியாள் கல்லூரி மாணவி இரண்டாம் இடம் என்றும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு எனது மகளை உடனடியாக அலுவலகத்திற்கு அழைத்து சென்று மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில் விபரங்கள் பூரணப்படுத்தப்பட்டு கையொப்பம் பெறப்பட்டு புகைப்படம் எடுத்துவிட்டு மாகாணத்திற்கான திகதி அறிவிக்கப்படும் போது பங்குபற்றுமாறும் கூறினர்.
இதன் பின்னர் சகல போட்டி நிகழ்வுகளும் நிறைவு பெற்று நாங்கள் வீடு திரும்பத் தயாராகிய நிலையில் ஏற்கனவே ஒட்டப்பட்ட பெறுபேறு அகற்றப்பட்டு எனது மகளான தி/மூ.சம்பூர் மகாவித்தியாலம் இரண்டாம் இடம் என்றும் தி/புனித மரியாள் கல்லூரி முதலாம் இடம் என்றும், மாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டு நான் பொறுப்பாசிரியர்களுடன் அலுவலகம் சென்று கேட்டபோது அதற்கான சரியான காரணம் கூறவில்லை.
மாறாக தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து எம்மை அச்சுறுத்தலாக பேசிய நிலையில் எமது வலயம் சார்பானவர்கள் இதற்கு தீர்வைக் கேட்கும்போது விடயத்தை கடிதம் மூலம் வழங்குமாறும் இரண்டு மாணவிகளையும் முதல்நிலை என அறிவிக்கவுள்ளதாகவும் தற்போது அலுவலக நேரம் நிறைவு பெற்றுள்ளதாகவும் தகவலை எமது வலயத்திற்கு அறியத்தருவதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் ஏனைய போட்டி நிகழ்வுகளின் விபரம் வலயத்துக்கு அனுப்பியுள்ள நிலையில் இதற்கான தீர்வு வழங்கப்படவில்லை. இச்செயற்படானது எனது பிள்ளைக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதனால் பிள்ளை மிகுந்த உளத்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
எனது பிள்ளையின் மனநிலையினை சிறிதளவும் எண்ணாது இவ்வாறு செயற்பட்டுள்ளார்கள். எனது பிள்ளை மாகாணத்தில் பங்கு பற்றுவதனையே நாளாந்தம் உச்சரிக்கும் நிலையில் இவர்களது செயற்பாடானது நாளந்தம் எனது பிள்ளையை மன உளைச்சலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் நிலையில் எனது பிள்ளைக்கான நீதியான தீர்வினை உடனடியாகப் பெற்று 05.07.2025 நடைபெறவுள்ள மாகாண மட்ட போட்டியில் பங்கு கொள்வதனை உறுதிப்படுத்தி தருமாறு தங்களை இரு கரம் கூப்பி கேட்டு நிற்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர், பாடசாலை அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பித்திருக்கின்ற அதே வேளையிலே மனித உரிமை ஆணைக்குழுவிலும் குறித்த விடயம் தொடர்பிலான முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
தமது பிள்ளைக்கு சரியான தீர்வு பெற்றுத் தர வேண்டும் எனவும் பிள்ளை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் இதற்கு உரிய தரப்புகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


