முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் அரச இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாகவே விவாகரத்து வதந்திகள் வலுப்பெற்றன. இதனையடுத்து விவாகரத்து குறித்த வதந்திகளை மிச்செல் ஒபாமா மறுத்தார். ஆனாலும் விவாகரத்து வதந்திகள் தற்போது வரை குறைந்தபாடில்லை. இந்நிலையில், விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு மீண்டும் ஒருமுறை மிச்செல் ஒபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மிச்செல் ஒபாமா, “எங்களுக்கு 60 வயது ஆகின்றது. என் கணவருடன் நான் வெளியில் செல்வதை மக்கள் பார்க்காததால், எங்கள் திருமண வாழ்க்கை முடிந்து விட்டதாக வதந்திகள் பரவுகின்றன. எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், நாங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில்லை.
இறுதிச் சடங்குகள், பதவியேற்பு விழாக்களில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்று நான் முடிவெடுத்தேன். இந்த விடயங்களில் இருந்து நான் விலகி இருக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது தான் வதந்திகளுக்கு காரணமாகியுள்ளது” என்று தெரிவித்தார்.