இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பில் கடந்த 25 ஆம் திகதி தொடங்கியது.
நாணயற் சுழற்சியில் வென்ற வங்கதேசம் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 247 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதன் பின்னர் முதல் சுற்றில் தொடங்கிய இலங்கை 458 ஓட்டங்களை குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ஓட்டங்கள் விளாசினார். குசல் மெண்டிஸ் 84 ஓட்டங்களும், தினேஷ் சண்டிமல் 93 ஓட்டங்களும் சேர்த்தனர்.
பின்னர் 211 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2 ஆவது சுற்றை தொடங்கியது. 2 ஆவது சுற்றிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
இதனால் இன்றைய 3 ஆவது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 4 ஆம் நாளில் விளையாடிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 133 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன்மூலம் சுற்று மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.