கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான முறையற்ற இடமாற்றம் கண்டிக்கத்தக்கதாகும் எனவும் இது திட்டமிடப்பட்ட இடமாற்றமாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜயகுமார் தெரிவித்தார்.
தம்பலகாமத்தில் உள்ள அவரது பிரத்தியேக இல்லத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவில் இடமாற்றம் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் இதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தையும் நடாத்தியுள்ளார்கள்.
இது திட்டமிட்டு அரச உத்தியோகத்தர்கள் மீது இடம்பெறும் ஒரு செயலாகும் தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்வதனால் வாழ்வாதாரம், குடும்ப நிலை என்னவாகும் இதனால் மாதாந்த சம்பளம் குடும்ப செலவுக்கு போதியளவு இல்லாத நிலையில் போக்குவரத்துக்கே போதுமானது. நாடாளுமன்றில் இதனை கொண்டு சென்று திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை பேசி அவர்களுக்கு கரம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறான நிலையில் எமது தம்பலகாமம் பிரதேச பகுதியிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களும் மொறவெவ, குச்சவெளி, சேருநுவர உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் அவர்களுக்காக அருகாமையில் உள்ள இடங்களுக்கு நியாயமானதான இடமாற்றத்தை வழங்க வேண்டும் இல்லாது போனால் தற்போதைய மாதாந்த சம்பளம் குடும்பத்தை கொண்டு நடத்தவோ பிள்ளைகளை பராமரிகாகவோ முடியாது எனவும் மேலும் தெரிவித்தார்.