இலங்கை கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை காலை இரண்டு படகு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், விபத்துக்களின் விளைவாக மீனவர்கள் பலர் காணாமல்போயுள்ளனர் எனவும், அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு இந்தச் சம்பவங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகின்றது என்றும், காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், தொடர்புடைய நிவாரணங்களை வழங்குவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் மீன்பிடிச் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக உறுதியுடன் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய விபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தேவேந்திரமுனை விபத்து
மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற எம்.டி.ஆர் 263 தினேஷ் 4 என்ற பல நாள் மீன்பிடிப் படகு, ஒரு வர்த்தகக் கப்பலுடன் மோதியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தப் படகில் ஐந்து மீனவர்கள் இருந்தனர். படகின் மேல் பகுதியில் இருந்த ஒரு மீனவர் மீட்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக இலங்கைக் கடற்படையினரால் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.
மற்ற நான்கு பேரையும் தேடும் நடவடிக்கையில் இலங்கைக் கடற்படையினர் இன்று காலை 7:30 மணி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கரையில் இருந்து சுமார் 20 கடல் மைல்கள் தொலைவில் வர்த்தகக் கப்பல்கள் செல்லும் பாதையில் நிகழ்ந்துள்ளது.
மீன்பிடிப் படகின் கீழ்ப் பகுதியில் ஏனைய மீனவர்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கைக் கடற்படையினர் சுழியோடிகளுடன் இணைந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மற்ற மீனவர்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த உறுதிப்படுத்தினார்.
பேருவளை விபத்து
களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, மொரகல்லை பிரதேசத்தில் இன்று காலை இரண்டு மீனவர்கள் சென்ற ஒருநாள் படகு விபத்துக்குள்ளானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் இல்லாமல் படகு கடலில் காணப்பட்டது. அது தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. காணாமல்போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் கரையிலிருந்து மிக அருகில் நிகழ்ந்துள்ளது.
மீனவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், இரண்டு மீனவர்கள் இந்தப் படகில் சென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மீனவர்களையும் கண்டுபிடிப்பதற்கான முழு முயற்சியும் எடுக்கப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.