விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலுக்கு நடிகை திரிஷா எந்திர யானை ஒன்றை வழங்கி உள்ளார்.
அந்த யானையின் அறிமுக நிகழ்ச்சியில் ஊர்மக்கள் ஏராளமானோர் பங்கேற்றியுள்ளார்.
அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் செல்வ விநாயகர் கோயில் மற்றும் வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரபல நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சத்தில் எந்திர யானையை வழங்கி இருக்கிறார்கள்.
3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜ யானை போன்று பிரமாண்டமாக இந்த எந்திர யானை உள்ளது. அதற்கு கஜா எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.
கேரளாவில் உருவாக்கப்பட்ட இந்த எந்திர யானைக்கு தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. சக்கரங்கள் மூலம் வீதி உலா அழைத்துச் செல்ல முடியும். சுவாமி ஊர்வலத்துக்கும் பயன்படுத்த முடியும். காதுகள், தும்பிக்கையும், தலையையும் அசைக்கின்றது. பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் செய்கிறது. பக்தர்கள் மீது தண்ணீரை விசிறவும் செய்யுமாம்.
அந்த யானை நகர வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்டபோது, மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக எந்திர யானை, கோவிலுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறும்போது, “வனவிலங்குகளை பாதுகாக்கும் விதமாகவும், யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் நடிகை திரிஷா இந்த எந்திர யானையை வழங்கி இருக்கிறார்” என்றனர்.