சிறுவயதில் தொடங்கிய தனது கவிதைத் தாகம் இன்று ஐம்பது வருடங்களைத் தாண்டி நீண்டு வளர்ந்து கொண்டு செல்கிறது. 1970 காலப் பகுதியில் தொடங்கிய சிறு துளி இன்று பெரு வெளிச்சமாக காட்சி தருகிறது. கவிதை ஊற்று உள்ள மனதுக்கு களம் அமைவது கடினம். அமைந்த முதலாவது களத்திலேயே நல்ல விமர்சனம் பெற்று முதல் படியால் வெற்றி கொண்ட எழுத்துக்களே உதிக்கிறது இன்றுவரை. அதற்கு சாட்சியாக சில கவிகள்,
இயற்கை என்ன சொல்லும்? எனும் தலைப்பில்
“தவழும் அலைகள் தரையில் புரண்டு
தாவிச் சென்று எதையோ சொல்லும்
பவனம் நிறைந்த விண்ணின் வெளியில்
பரிதியின் கதிர்கள் வாழச் சொல்லும்
புவியில் மலரும் கோடி மலர்கள்
புதிய வாழ்வைத் தொடங்கச் சொல்லும்
சுவையின் தன்மை இதுதானென்று
கரும்புகள் வந்து காதிற் சொல்லும்”
போர் எதற்கு எனும் தலைப்பில்
“பட்டினியும் பசிப்பிணியும் எம்மை வாட்டும்
பகைமையினை விளைவிக்கும் போரெதற்கு
நட்டமரம் தழைப்பதுபோல் கொள்கை தன்னை
நன்றாக வளரத்தெடுத்தால் போரெதற்கு
கட்டியதாம் கணவனையுமிழந்து பெண்ணைக்
கடுந்துயர மெய்தவைக்கும் போரெதற்கு
திட்டங்கள் பலவிருந்தும் எங்களுக்குள்
தீமையினை விளைவிக்கும் போரெதற்கு “
ஹைக்கு எனும் தலைப்பில்
“நன்றிக்குரிய என் பேனாவே
என்னிடம் பொன்னாடைகள் இல்லை
இதோ என் கவிதைகள்….
மடியில் நெருப்பு
உதட்டில் சிரிப்பு
எரிந்தது ஒரு பூ
ஏழையின் கண்ணீர்
ஏனிந்த வெப்பம் – ஓர்
இதயத்தில் நெருப்பு “
எதிர்கால விளைவுகளையும் அதன் தாக்கத்தையும் நிறைத்து சமாதான விரும்பியாகவும் அதே சமயம் நம்மை உணர வைக்கும் ஊக்கியாகவும் கவிதைகள் தடம் பதிக்கிறது.
இயற்கை மீது கொண்ட அன்பும் படைப்பின் மீதுள்ள பேரன்பும் அச்சமும் குவிந்து கிடப்பதை இக் கவிதைகளில் அறியலாம். இளம் கவிஞர்களை எழுதத் தூண்டும் கோலாக அமையும் கவிதைகள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.
விமர்சகர்
எழுத்தாளர்
-ஆதன் குணா –
நூல்:- கவிதைச் சிறகு
எழுத்தாளர்:-தாஸிம் அகமது
விலை:- 500 ரூபாய்


