“தமிழ் கபினட் கடற்றொழில் அமைச்சர் ஒருவர் இருக்க சிங்கள பிரதி அமைச்சரால் நேரவிரயம் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது” என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் விசனம் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”கடற்றொழில் அமைச்சால் அமைக்கப்பட்ட ஏலம் கூறும் இடம், மீனவர்கள் தங்கும் இடம், ஆடு மாடுகள் படுக்கின்ற இடமாக மாறி உள்ளது. அரச நிதி பொருத்தமற்ற இடத்தில் வீணாக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக கதைப்பதற்கு மாவட்ட கடற்றொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேரத்தினைக் கேட்ட பொழுது, நாம் தவிசாளர்களாக தெரிவு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து பிரதி அமைச்சரும் அனுப்பி உள்ளார்கள் .
இத்தகைய கூட்டங்கள் இவ்வாறு தான் எதிர்காலத்திலும் நடக்கும் என்றால் நாங்கள் இவற்றில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
கடற்றொழில் அமைச்சர் தமிழர் ஒருவர் இருக்கின்ற நிலையில் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த சிங்கள பிரதி அமைச்சர் ஒருவர் நீண்ட நேரம் சிங்களத்தில் நிகழ்ச்சி நேரலை முன்னெடுத்திருந்தார்.
மீனவ சங்கப் பிரதிநிதி ஒருவர், சேந்தான்குளப் பிரச்சினை தொடர்பாக பேச பிரதி அமைச்சர் ரத்ன கமகே மயிலிட்டி துறைமுகம் தொடர்பில் பேசிக் கொண்டிருந்தார். இது தொடர்பில் கூட்டங்களை நடத்துகின்ற கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோர் கூடுதலான நேரம் மொழிபெயர்ப்பில் செலவிடாது மக்களுடைய பிரச்சினைகளை அறிவதற்கு நேரங்களை ஒதுக்க வேண்டும். திட்டமிட்டு இந்தக் கூட்டங்களை நடத்தி நேரவிரயத்தை தடுக்க வேண்டும் அவர் மேலும் தெரிவித்தார்.










