நாசாவுடன் இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் “அக்சியம் ஸ்பேஸ் அக்ஸ்-4” என்ற திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் இன்று (25) விண்வெளிக்கு புறப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்த நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ரொக்கெட் மூலம் இலங்கை நேரத்தின்படி, இன்று மதியம் 12.01 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் ட்ராகன் விண்கலம் விண்ணிற்கு புறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை (26) மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் ட்ராகன் விண்கலம் அடைய உள்ளது.
பல்வேறு காரணங்களால் தொடர்ந்து 7 முறை ஒத்திவைக்கப்பட்ட இப்பயணமானது தற்போது 8 ஆவது முறையாக இன்று வெற்றிகரமாக பால்கன்-9 ரொக்கெட் விண்ணிற்கு புறப்பட்டுள்ளது.










