வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நாளையதினம் செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் உபதவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது. அந்தவகையில் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஜக்கிய மக்கள் சக்தி), இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, சிறிரெலோ (ஜனநாயக தேசிய கூட்டணி) ஆகிய கட்சிகளிற்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் செட்டிகுளம் பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெத்துள்ளோம்.
அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்படவுள்ளதுடன், உப தவிசாளராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் செட்டிகுளம் பிரதேச சபையின் ஆட்சியை எமது கூட்டு நிச்சயமாக கைப்பற்றும். பல தேவைகள் அந்த பிரதேசத்தில் இருக்கின்றது. அந்த தேவைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை இந்த கட்சிகள் கூட்டாக மேற்கொள்ளும்.
வவுனியா வடக்கு பிரதேச சபையிலும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெத்துள்ளோம். அந்த சபையின் தவிசாளர் யார் என்பது தொடர்பாக பல கருத்துக்கள் உள்ளது. அவற்றை நாம் ஆராய்ந்து பொருத்தமான முடிவினை எடுப்போம் என்றார்.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துமுகமது, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.










