“பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.
மகனைத் தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை” என ஒரு தாய் தெரிவித்துள்ளார்.
செம்மணிப் பகுதியில் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அணையா தீபம்’ போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி – இரணைமடுப் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி எனது மகனான சுரேந்திரன் சுதாகரனுக்கு யுத்தத்தின் போது காலில் காயம் ஏற்பட்டது.
16 ஆம் திகதி வரையில் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில், 16 ஆம் திகதியன்று பதவியா வைத்தியசாலைக்கு என கப்பலில் அழைத்து செல்லப்பட்டார்.
நாங்கள் வவுனியா முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நாங்கள் முகாமில் இருந்த போதும் மகனை பற்றிய தகவல்களை அறிய முற்பட்டும் தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
நாம் மீள்குடியேற்றப்பட்டு இரணைமடுப் பகுதி வந்தவேளை, பதவியா வைத்தியசாலையில் எமது மகனுக்கு 7 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மகனுடன் 07 நாட்களும் கதைத்ததாகவும், அதன் பின் 8 ஆவது நாள் காலையில் மகனை பார்க்க சென்றவேளை மகனைக் காணவில்லை எனவும் இருவர் எம்மிடம் தெரிவித்தனர்.
எனது மகன் வைத்தியசாலையில் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தமைக்கு கண்கண்ட சாட்சியங்கள் உண்டு. எமது மகனுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்தக் கோரியே 16 வருடங்களாக நாங்கள் போராடி வருகிறோம்.
எனது மகன் வைத்தியசாலையில் உயிருடன் சிகிச்சை பெற்று வந்தமை தொடர்பான தகவல் அறிந்ததும், மனித உரிமை ஆணைக்குழு முதல் வவுனியா யோசப் இராணுவ முகாம் எனப் பல இடங்களில் முறைப்பாடு செய்தும், தேடி அலைந்தும் வருகிறேன்.
எனது மகனின் உயிருக்கு என்ன ஆனாது ? என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியே 16 வருடங்களாக போராடி வருகிறேன்” எனத் தெரிவித்தார்.