நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்பார்வையின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடந்த 05.06.2025 ஆம் திகதி திருநெல்வேலி பொதுச் சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் பலசரக்கு கடை பரிசோதிக்கப்பட்டது. காலாவதியான பொருட்கள், சுட்டுத்துண்டு இன்றிய பொருட்கள் என ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அதேசமயம் கடந்த 21.06.2025 ம் திகதி திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் அவர்களால் திருநெல்வேலியில் உணவகம் ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஏற்கனவே பல தடவைகள் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டு நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும், சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களை கவனத்திற் கொள்ளாமல், குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது சுகாதார பரிசோதகரால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து பலசரக்கு கடை, உணவக உரிமையாளர்களிற்கு எதிராக இன்றைய தினம் (23) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட்டன. வழக்குகளை இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் செ. லெனின்குமார் பலசரக்கு கடை உரிமையாளரிற்கு 100,000 ரூபாய் தண்டம் விதித்ததுடன், உணவக உரிமையாளரிற்கு 90,000 ரூபாய் தண்டம் விதித்து உணவகத்தை சீர்செய்யும் வரை சீல் வைத்து மூடுமாறும் சுகாதார பரிசோதகரிற்கு கட்டளையிட்டார். இதனையடுத்து உணவகம் சீல் வைத்து மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.