வேல்ட் விஷன் லங்கா நிறுவனமானது சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய “சத்துள்ள உணவு சிறுவர்களுக்கான உரிமை” எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நேற்றையதினம் நடைபெற்றது.
நடைபவனியானது சாவகச்சேரி நகரசபைக்கு முன்பாக ஆரம்பித்து சாவகச்சேரி பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவர்களினால் விழிப்புணர்வு வீதி நாடகமும் ஆற்றுகை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆரம்பமான நடைபவனியானது மீண்டும் சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தை சென்றடைந்தது.
இந் நிகழ்விற்கு தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிபாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் விழிப்புணர்வு சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதோடு பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் அரச கொள்கை நியமங்களை உறுதியாக செயற்படுத்த வேண்டி மாணவர்களினால் கையொப்பமிட்ட விண்ணப்பக் கோரிக்கையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச சிறுவர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் இந்த செயற்றிட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.




