இனியும் கடலில் இரத்தம் சிந்துவதையோ இவ்வாறான உயிரிழப்புகளையோ ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் மீன் பிடிப்பதற்காக கடந்த 19 ஆம் திகதி அதிகாலை சென்றிருந்த முல்லைத்தீவு தீர்த்தக்கரையை சேர்ந்த மீனவர் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த மீனவர் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் தடயவியல் பொலிசாரும் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச, சம்மேளன பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாச பிரதிநிதிகளும் இன்றைய தினம் குறித்த மீனவனின் வீட்டிற்கு வருகை தந்து மீனவரின் உறவினர்களோடு கலந்துரையாடி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், முல்லைத்தீவில் இடம்பெற்ற ஒரு அனர்த்தம் காரணமாக ஒரு மீனவனின் உயிர் பிரிந்துள்ளது. அவர் எமது சமாச தலைவர் ஒருவரின் சகோதரரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு ஒரு பாரிய போராட்டம் நடந்தது. அதில் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டது. அந்தக் கலவரம் நடைபெற்ற போது நாங்கள் இங்கு வருகை தந்திருந்தோம். குறித்த போராட்டத்தில் பங்கு கொண்ட ஒருவரும் இந்த இழுவை மடிகளுக்கு எதிராக போராடியவரும் சட்டவிரோத மீன்படி நடவடிக்கைகளுக்கு எதிராக போராடியவருமே இன்று உயிரிழந்துள்ளார்.
எங்களுடைய உடன்பிறப்புகள் அது முல்லைத்தீவாக இருந்தால் என்ன யாழ்ப்பாணமாக இருந்தால் என்ன திருகோணமலையாக இருந்தால் என்ன நாங்கள் எல்லோரும் கடற்தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் இந்த கடலில் இரத்தம் சிந்துவதையோ இவ்வாறான உயிரிழப்புக்களையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவருடைய உயிரிழப்பும் இன்று என்ன நடந்தது என்பது தொடர்பாக பொலிசார் ஒருபுறம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். முல்லைத்தீவு மீனவர்கள் சட்டவிரோத தொழிலாளர்களால் இவர் அடித்துக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் எங்களுடைய கடலில் இனி மேலும் இரத்தம் சிந்துவதையோ உயர் பிரிவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான நிகழ்வுகள் இனியும் நடக்கக்கூடாது என்பதை எங்களுடைய கடற்தொழில் அமைச்சருக்கும் கடற்தொழில் அமைச்சர் ஊடாக ஜனாதிபதி அவர்களுக்கும் எங்களுடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகளுக்கும் இந்த விடயங்களை முன்னிறுத்தி இனிவரும் காலங்களில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க இனமுறுகல்கள் ஏற்படாத வகையில் தவிர்ப்பதற்கான ஒழுங்குகளை செய்வதாக அமைப்புகள் ஒரு முடிவு எடுத்து இருக்கின்றோம்.
இந்த முடிவின் அடிப்படையில் அதற்காக அறிக்கைகளை தயாரித்து அனைத்து தரப்பினருக்கும் வழங்க உள்ளோம் எனவும் தெரிவித்தனர்.



