ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கும் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (22) முள்ளியவளை பகுதியில் இடம்பெற்றது.
அந்தவகையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்களும், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்களும், கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்களுமாக மொத்தமாக பத்து உறுப்பினர்கள் குறித்த சத்திய பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக கரைதுறைப்பற்று பிரதேச சபைக்காக சுயேட்சை குழுவாக போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர் ஒருவரும் இன்று சத்திய பிரமாணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சத்திய பிரமாண நிகழ்வில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினுடைய பங்காளிக் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபைக்காக குறித்த கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











