மன்னார் நகர சபையினுள் புகுந்து நபர் ஒருவர் தகாத வார்த்தைகளில் அரச உத்தியோகத்தர் ஒருவருடன் முரண்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் சகோதர மொழி இனத்தை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார்.
மன்னார் நகர சபை எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி பொருள் லேபில் தொடர்பில் காணப்பட்ட குறைபாடு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை ஒன்றை மன்னார் நகர சபை சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட நிலையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மன்னார் நகர சபை அலுவலகத்தினுள் புகுந்து அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் குறித்த சுகாதாரப் பரிசோதகரையும் அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டுள்ளார்.
அதேநேரம் குறித்த சகோதர இன சுகாதாரப் பரிசோதகரையும், அவருடைய இனத்தையும் குறித்த நபர் இழிவாக கதைத்து அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில், குறித்த நபருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சகோதர இனத்தைச் சேர்ந்த சுகாதாரப் பரிசோதகர், மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அண்மைக்காலமாக சுகாதார சீர்கோடுகளுடன் இயங்கி வந்த பல்வேறு உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்ற நிலையில் அவரை அச்சுறுத்தும் விதமாக குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.