ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு தமிழரசு கட்சி சார்பாக போட்டியிட்டு தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள மு.முரளிதரன் மற்றும் சக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சித்தாண்டியில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை சித்தாண்டி பிரதேச பொது மக்கள், சமூக அமைப்புக்கள், ஆலய நிர்வாக சபையினர் மற்றும் விளையாட்டு கழகங்கள் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது அவர்களை கௌரவிக்கும் முகமாக சித்தாண்டி முற்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றதுடன் மலர் மாலை மற்றும் பொண்ணாடை அணிவித்து பொது மக்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இடம்பெற்ற பூசையில் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து மதகுரமார்களின் நல்லாசியினையும் பெற்றனர். அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய நிலப்பரப்பினைக் கொண்ட பிரதேச சபையாக ஏறாவூர்பற்று பிரதேச சபை அமைந்துள்ளது. அத்துடன் இரண்டு சமூகம், நான்கு மதங்களை கொண்டமைந்துள்ளதுடன் தேசியத்தில் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண் போகாத வண்ணம் செயற்படுவேன்” எனத் தெரிவித்தார்.
அதன் பின்னர் சித்தாண்டி பிரதேசத்தில் உள்ள சகல ஆலயங்களுக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் பொதுமக்களினை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்ததுக் கொண்டனர்.
இன்றைய கௌரவிப்பு நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான போட்டியிட்ட மாவடிவேம்பு, சித்தாண்டி, ஈரளக்குளம் போன்ற இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களும், அதற்கு துணையாக நின்ற பட்டியல் வேட்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


