யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள் செயல்’ என்கின்ற தன்னார்வ இளையோர் அமைப்பால் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் ‘அணையா விளக்கு’ என்ற பெயருடன் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
“இந்தப் போராட்டத்தில் எமது கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் அணிதிரண்டு பங்கேற்குமாறு மிகவும் அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்” என்று தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அம்பாறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தற்போது இலங்கை வரக் கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் அவரிடத்தில் வேண்டியிருந்தன. ஆனாலும் அதையும் மீறி அவர் இலங்கை வருகின்றார். அப்படியான சூழலில் அவருடைய வருகையில் விசேடமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சம்பந்தமான விடயங்களில் அவர் கரிசனை செலுத்த வேண்டும்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசு பின்னிற்பதை அவதானித்து அதற்கான தனது கருத்துக்களை சொல்ல வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிடம் நாம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் கேட்டிருக்கின்றோம்.
விசேடமாக யாழ்ப்பாணம் – செம்மணியில் மனிதப் புதைகுழி திரும்பவும் அகழப்படுகின்றது. அதில் மிகவும் மோசமான விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெண்கள், குழந்தைகள் உட்படப் பலரின் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன.
இதேநேரம் சில அமைப்புக்கள், செம்மணிப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி ‘அணையா விளக்கு’ என்ற பெயரில் மூன்று தினங்கள் தொடர் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் எமது கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் அணிதிரண்டு பங்கேற்குமாறும் மிகவும் அன்போடு வேண்டிக் கொள்கின்றேன்.
இது எங்களது தேசத்துக்கு, எங்களது மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு போராட்டம். உண்மைகள் வெளிவர புதைகுழி தோண்டப்பட வேண்டிய விடயம் பகிரங்கமாகச் செய்யப்பட வேண்டும். இதனை ஐ.நா போன்ற அலுவலகங்கள் மேற்பார்வை செய்ய வேண்டும்” என்றார்.